Friday, March 19, 2010

ஹவாய்(Hawaii) பயணம்

அமெரிக்காவின் மிகச்சிறந்த சுற்றுலாத்தளங்களில் ஒன்றான ஹவாய் தீவுகளுக்கு (Hawaii Islands) செல்லவேண்டும் என்பது எங்களின் நீண்டகாலக் கனவு.     ரேணுகாவின் சித்தப்பாவும், சித்தியும் கோவையில் இருந்து விடுமுறையில் அமெரிக்கா வந்த போது, அவர்களையும் அழைத்துக் கொண்டு ஹவாய் பயணத்திற்கு ஏற்பாடு செய்தோம்.  கடந்த 2007 ஆம்  ஆண்டு செப்டம்பர் மாதம் 19 தேதி  நியூசெர்சியில் இருந்து முதலில் சான் பிரான்சிஸ்கோ சென்றோம்.   மறு நாள் அங்கிருந்து ஹோணலூலுவிற்கு (Honolulu) விமானத்தில் பயணித்தோம். சென்றடைய ஐந்தரை மணி நேரம் ஆயிற்று.   ஹவாய் தீவுகளில் நான்கு தீவுகள் பெரிதானவை.    இவைகள் ஹவாய் (Hawaii or Big island),ஒவாகு (Oahu), கவாய் (Kauai), மாஉய்(Maui) என்றழைக்கப்படுகிறது.

   ஹோணலூலு(Honolulu) நகரம் ஒவாகுத் தீவில் உள்ளது.     திட்டமிட்டபடி அங்கிருந்து முதலில் கவாய்(Kauai) தீவிற்குக் கிளம்பினோம்.     அரை மணி நேர பயண இறுதியில் விமானம் கவாய் தீவில் உள்ள லிஹு(Lihue) விமான நிலையத்தை அடைந்தது.



 தீவை சுற்றிப் பார்க்க ஒரு வாடகைக்காரை எடுத்துக்கொண்டு நாங்கள் கடற்கரை ஓரம் உள்ள கஹா லானி(Kaha Lani) தங்கும் விடுதியை வந்தடையும் போது இருட்டு கட்ட துவங்கி விட்டது .   கடற்கரையை ஒட்டியே அமைந்துள்ள அந்த விடுதியின் மேல் தளத்தில் நாங்கள் தங்கினோம்.  எந்நேரமும் கடலின் கண்கொள்ளாக் காட்சியை அறையில் இருந்தவாறே பார்க்க முடியும்.  சிறிது நேரம் ஒய்வு எடுத்த பின், இரவில் கடற்கரைக்குச் சென்றோம்.  ஆர்ப்பரிக்கும் அலைகள் நிலா ஒளியில் பளபளத்தன.



மறு நாள் தீவில் உள்ள சைவமடாலயத்தை(சைவ சித்தாந்த திருச்சபை அல்லது கவாய் ஆதீனம்) பார்க்க கிளம்பினோம்.    தென் இந்திய/ இலங்கை சைவ பாரம்பரியம் மேற்கு நாடுகளில் வேரூன்ற வேண்டி சத்குரு சிவாயச் சுப்ரமணியசுவாமியால் நிறுவப்பட்டது.    இந்த மடம் தற்போது சற்குரு போதிநாத வேலன்சுவாமிகள் வழிகாட்டுதலின் வளர்கிறது.  செல்லும் வழியில் வைளுவ(Wailua) பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள அழகிய நீர்வீழ்ச்சியைப் பார்த்தோம்.   சிறிது நேரப் பயணத்தில் கஹோளலேலே (107 Kaholalele Road, Kapaa) சாலையில் உள்ள மடத்தின் நுழைவு
வாயிலை அடைந்தோம்.   தாவரவியல் பூங்காக்கள், நீர்வழிகள் மற்றும் குளங்கள் சூழ்ந்து 353 ஏக்கர் பரப்புக் கொண்டது இந்த ஆன்மீக மடாலயம். இங்கே போதிநாத மற்றும் இருபதிற்கும் மேற்பட்ட துறவிகள்/ சீடர்கள் , சிவ வழிபாடு மற்றும் தன்னலமற்ற மதச் சேவையை மேற்கொண்டுள்ளனர். நுழைவு வாயிலைத் தாண்டி கடவுள்(Kadavul) கோயில் உள்ளது.


அதன் மைய கருவறையில் 6 அடி உயர நடராஜர் வெண்கல சிலை உள்ளது. விநாயகர்,முருகன் சிலைகள் சன்னதியில் உள்ளன.  தற்போது கட்டப்பட்டு வரும் இறைவன் கோயிலின் கருவறையில் வைக்கப்பட இருக்கும் மூன்று அடி உயர படிக சிவலிங்கம் இங்கு வைக்கப்பட்டு இருந்தது.
பின்பு புதிதாகக் கட்டப்படும் கோயிலைக் காண சென்றோம். சுற்றி காண்பிக்கத் துறவியும் கூட வந்திருந்தார். இங்கு இறைவன் (Iraivan) கோயில் வெள்ளை கிரானைட் கற்களால் கட்டப்பட்டு வருகிறது.  கோவில் வடிவமைப்பு 1980 களின் பிற்பகுதியில் கணபதி சதபதியால் நிறைவுற்றது. கோயிலில் பல அரிய கட்டடக்கலை அம்சங்கள் உள்ளன.  முற்றிலும் எந்த இயந்திரங்கள் பயன்பாடு இல்லாமல், கையில் செதுக்கப்பட்ட கற்களால் கட்டப்படுகிறது.


தமிழகத்தில் இருந்து வந்த சிற்பிகள் சுத்தியல்கள் கொண்டு கற்களை வடிவமைப்பதை பார்த்தோம். கற்களால் இசை தூண்கள்,ஆறு கல் சிங்கங்கள், அதன் வாயினுள் சுழலும் கல் பந்துகள் போன்றவைகள் இன்னும் கட்டப்பட உள்ளன என்று கூறினார்கள். கோயில் 2017 ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கற்கோயில்1,000 ஆண்டுகளுக்கு நீடிக்கும் வண்ணம் கட்டப்பட்டு வருகிறது. மறைந்த சத்குரு சிவாயச் சுப்ரமணியசுவாமியின் கனவு நினவாகுகிறது என்று அருகில் இருந்த துறவி கூறினார்.

 கோயிலை சுற்றி பெரிய ருத்ராட்சர மரங்கள் இருந்தன.  இந்த மரங்கள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இமய மலை அடிவாரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டன என்றார்கள்.   மரத்தின் கீழ், நீல நிற ருத்ராட்சர பழங்கள் இரைந்து கிடந்தன.   இந்தப் பழத்தின் கொட்டையைக் கொண்டுதான் ருத்ராட்சர மாலைகளைச் செய்கிறார்கள்.    நீரோடைகளும், பசுமையான பழ மரங்கள் நிறைந்தும், வழிபடச் சிவலிங்கங்கள் கொண்டும் இந்தப் பகுதி மிக அழகாகக் காட்சியளிக்கிறது.


கோயிலை விட்டு திரும்பும் வழியில்,சற்குரு போதிநாத வேலன்சுவாமி
களைச்  சந்தித்து, உரையாடி அவரின் ஆசிர்வாதங்களைப் பெற்றோம்.

மறு நாள் காலையில் கடலுக்கு மேல் எழும் சூர்யோதயம் பார்த்தோம். கடற்கரை மணலில், கடல்\ அலைகளில் காலை நனைத்தவாறே வெகு தூரம் நடந்தோம்.  கரையில் இருந்தவாறே கடலில் தூண்டில் வீசி சிலர் பெரிய மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்தனர்.




காலை உணவை முடித்துக்கொண்டு கவாய் தீவின் மேற்கு பகுதியில் உள்ள வைமியா கேனியன் (Waimea Canyon) பார்க்க கிளம்பினோம்.   இது பசிபிக் கடலின் கிரான்ட் கேனியன் என்று அழைக்கப்படுகிறது.   காரில் ஒரு மணி நேரம் பயணித்து வைமியாவின் அடிவாரத்தை அடைந்தோம்.  மலை மீது அரை மணிநேரம் காரில் சென்று வைமியா பள்ளத்தாக்கு பகுதிகளைப் பார்த்தோம். இந்தப் பள்ளத்தாக்கு 14 மைல்கள் நீண்டும், ஒரு மைல் அகலமும், 3,600 அடி ஆழமும் உடையது.





திரும்பும் வழியில் தீவின் தெற்கு கடற்கரையில் பாறைகள் நிறைந்த ஸ்பௌடிங் ஹார்ன்(Spouting Horn) என்ற இடத்திற்குச் சென்றோம். இங்குக் கடல் நீர் அலைகள் பாறைகளின் துவாரங்களில் உட்புகுந்து இரைப்பு ஒலியுடன் நீர் வீச்சாக ஐம்பது அடி உயரம் வரை பாய்கிறது.

இங்கிருந்து சில மைல்கள் பயணித்துப் புகழ் பெற்ற பாய்பு(Poipu)கடற்கரைக்குச் சென்றோம். மாலை நேரத்தில் கடற்கரை மிக அழகாக இருந்தது. தீவில் நிறைய இடங்களில் காட்டு கோழிகளைக் காணலாம். இவைகள் பறந்து மரக்கிளைகளில் அமரும். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பாலினிசியன் குடியேறிகள்(Polynesian settlers) உணவிற்காகக் கொண்டு வரப்பட்டு,இவைகள் தற்போது எல்லா இடங்களிலும் பரவி உள்ளன.

கவாய் தீவின் பரப்பளவு 560 சதுர மைல்கள். இங்கு அடிக்கடி மழை பெய்யும். இங்குள்ள வயாலீலே(Waialeale) மலைத்தொடரில் ஆண்டிற்கு 426 அங்குல மழைப்பெய்வு உள்ளது. தீவின் வட முனையில் நாபாலி கடற்கரை உள்ளது. நேரமின்மையால் அங்குச் செல்லவில்லை. இந்தத் தீவின் சிறப்பு அதன் இயற்கை காட்சிகள். மலைகள், பள்ளத்தாக்குகள், அடர்ந்த காடுகள் அதன் கீழே அழகிய கடற்கரை. பயணத்தின் அடுத்தக் கட்டமாகக் கவாய் தீவில் இருந்து ஒவாகு (Oahu) தீவில் உள்ள ஹோணலூலு நகருக்கு புறப்பட்டோம்.

கவாய் தீவில் இருந்து விமானத்தில் ஹோணலூலு வந்தடைய அரை மணி நேரம் ஆயிற்று.  ஒரு வாடகைக்காரை எடுத்துக்கொண்டு நாங்கள் வைகிகி(waikiki) கடற்கரை அருகில் உள்ள தங்கும் விடுதிக்கு சென்றோம். நாங்கள் விடுதியில் ௧௫ வது மாடியில் இருந்ததால், ஜன்னல் வழியாக வைகிகி கடற்கரையைப் பார்க்க முடிந்தது.   அப்பொழுது பெய்த மழையினால் ஒரு வானவில் தோன்றி இருந்தது.  

 
ஹவாய் தீவுகளில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரம் ஹோணலூலு.    இந் நகரம் அமெரிக்க ஹவாய் மாநில தலைநகரமாகவும் உள்ளது.   ஹவாய் தீவுகளின் பழங்குடி மக்கள் பாலினிசியன் இனத்தைச் சார்ந்தவர்கள்.    19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஹவாய் மன்னர்களின் ஆட்சி முடிவுக்கு வந்து, 1898ல் அமெரிக்கா எல்லா ஹவாய் தீவுகளையும் தன்னுடன் இணைத்துக் கொண்டது.
 வைகிகி((waikiki) கடற்கரையை ஒட்டியே இருக்கும் காலாகவ(Kalakaua) அவென்யூவில்தான் நகரின் பெரிய ஹோட்டல்கள்,ஆடம்பர வடிவமைப்பாளர் பிராண்ட் கடைகள் உள்ளன.  வைகிகி கடற்கரை வெள்ளை மணல் கொண்டது.   ஒரே சீரான அலைகளும், குறைந்த ஆழம் உள்ள கடலும் இருப்பதால் நிறையப் பேர் இங்கு சர்ப் செய்கின்றனர்.   நாங்களும்கடலில் இறங்கி, நீர் கழுத்தை தொடும் அளவிற்கு நடந்து, நீந்தினோம்.




கரை ஓரமாகவே சென்றால் டைமன்ட் ஹெட்( ) என்ற ஒரு செயலற்ற எரிமலை குன்றைக் காணலாம்.
மறு நாள் நாள் காலையில் தீவின் வடக்கு பகுதிகளைக் காணக்கிளம்பினோம். கடற்கரை ஓர கலனியானோலே சாலையில்( Kalanianaole Highway) பயணித்து
ஹானும குடா கடல் பூங்காவை(Hanauma Bay Nature Preserve Park) அடைந்தோம். ஆழமில்லா கடல் நீரில் மூழ்கி பல் வேறு வகையான மீன்களையும், கடல் ஆமைகளையும் அவைகளின் இருப்பிடத்திலேயே பார்க்கலாம். தொடர்ந்து பயணம் செய்து பல அழகான கடற்கரை காட்சிகளைக் கண்டோம்.



அடுத்து நாங்கள் சென்ற இடம் பேர்ல் ஹார்பர்(Pearl harbor).   இங்கு அமெரிக்கா கடற்படை தளம் உள்ளது.   இத் தளத்தின் மீது இம்பீரியல் ஜப்பனீஸ் கடற்படை டிசம்பர் 7, 1941 காலை நடத்திய வான் தாக்குதலால் பல அமெரிக்கக் கடற்படை போர்க்கப்பல்கள் அழிக்கப்பட்டு,இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.    இந்தத் தாக்குதல்தான் இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா 'நுழைய வழிவகுத்தது.    பேர்ல் ஹார்பரில் நினைவிடங்கள், அருங்காட்சியகங்கள், இரண்டாம் உலகப் போரில் பணியாற்றிய அனைவரையும் கெளரவப்படுத்தும் வகையில் உள்ளது. யுஎஸ்எஸ் அரிசோனா(USS Arizona) போர்க்கப்பலின் இடிபாடுகளில் கட்டப்பட்டுள்ள நினைவு காட்சியகம் பார்க்கவேண்டிய ஓன்று.

ஹோணலூலு நகரின் நடுவே 13.5 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது ஃபாஸ்டர் தாவரயியல் தோட்டம்( Foster Botanical Garden).  உலகின் பல பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட மரங்களையும், ஹவாய் தீவில் மட்டுமே உள்ள தாவர வகைகளையும் இங்குக் காணலாம்.

பயணத்தின் இறுதி நாள் தீவின் காட்சிகளை வானில் ஹெலிகாப்டரில் இருந்துபார்த்தோம். அரை மணி நேர ஹெலிகாப்டர் பயணத்தில் பேர்ல் ஹார்பர், வைகிகி , டயமண்ட் ஹெட், ஹானும (Hanauma), தீவின் அழகியகடற்கரைகள், அருவிகள், பள்ளத்தாக்குகள் மற்றும் பசுமையான மழைக்காடுகளைப் பார்த்தோம்.












No comments: