Friday, February 12, 2010

சுற்றுலாப் பயணம்- லாஸ் வேகஸ்(Las Vegas),கிராண்ட் கேன்யன்(Grand Canyon)

அணிச்சமும், அகிலும் கல்லூரியில் இருந்து கிருஸ்துமஸ் விடுமுறையில்தான் வீட்டுக்கு ஒன்றாக வருவார்கள். அவர்களையும் அழைத்துக்கொண்டு, குடும்பத்துடன் கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதக்கடைசி வாரத்தில் லாஸ் வேகஸ்(Las Vegas) நகரத்திற்கு நான்கு நாட்கள் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டோம்.






நாங்கள் லாஸ் வேகசில் ஹாரா ஹோட்டல் காசினோவில் ( Harrah's Las Vegas Hotel and Casino) தங்கினோம்.   நிறைய ஹோட்டல் காசினோக்கள் இந்த வேகாஸ் ஸ்டிரிபில்(Vegas Strip) உள்ளன.   இந்த தெருக்களில் எங்கும் மக்களின் கூட்டம்தான். பல்வேறு நாட்டு மக்களை ஒரே தெருவில் காணலாம்.   இங்கு தெருக்களைக் கடக்கும்போது நிறைய விபத்துக்கள் நடக்கின்றன.   ஆதலால் வீதியைக் கடக்க பாதசாரி பாலங்கள் எல்லா இடங்களிலும் இருந்தன.


ஒவ்வொரு ஹோடெலுக்கும் அதன் சொந்த அடையாளச் சின்னம்(theme)  உள்ளது. எம்ஜிஎமில்( MGM Grand Casino ) சிங்கங்கள்,  பெல்லாஜியோவில்(Bellagio)நீருற்று நிகழ்ச்சி, மிராஜ்ஜில்(Miraj) ஒரு வெடிக்கும் எரிமலை.



ஒவ்வொரு ஹோடேலிலும் காலை உணவு தானே பரிமாறும் பஃபே(Buffet) முறையில் உள்ளது. சூதாட்ட விளையாட்டுகளான போக்கர், பிளாக் ஜாக் தெரியாததனாலும்,அது விளையாட நிறையப் பணம் வேண்டியருந்ததனாலும் நாங்கள்  ஸ்லாட் மெசினில் விளையாடி நூறு டாலர் இழப்புடன் திருப்தி அடைந்தோம்.

அடுத்த நாள் எம்ஜிஎமில் ka எனும்  சர்கியூ டு சொளில்(Cirque du Soleil ) நிகழ்ச்சியைப் பார்க்க சென்றோம். மேற்கத்திய நாடக வரலாற்றில் மிக ஆடம்பரமான திரைஅரங்க நிகழ்ச்சியாகும்.  பலர் இந்த நிகழ்ச்சியில் அந்தரத்தில் தொங்கியும், உடல் வலிமையை அதன் எல்லைக்கே கொண்டு சென்றும்,நாடக வடிவமாக்கி கொடுக்கிறார்கள். இது போன்ற வியத்தகு நிகழ்ச்சியை கண்டதே இல்லை. இதில் உள்ள தொழில் நுட்பமும்,நாடகத்தில் வருவோரின் அலங்கார உடைகளும், காட்சி அமைப்பும் பிரமிக்க வைக்கிறது. நாடக நிகழ்ச்சியை உருவாக்க $ 165 மில்லியன் செலவானது என்கிறார்கள்.



கிராண்ட் கேன்யன்(Grand Canyon) ஒரு நாள் பேருந்து பயணத்திற்கு ட்ராவல் ஏஜென்சி மூலமாக ஏற்பாடு செய்து காலை எழு மணிக்கே கிளம்பினோம்.
இந்தப்பயணம் அரிசோனாவில்(Arizona) உள்ள ஹூவர் அணை(Hoover Dam) வழியாக கிராண்ட் கேன்யன்(Grand Canyon)தேசிய பூங்காவிற்கு செல்கிறது.
ஹூவர் அணையில் சிறிது நேரம் நின்று தூரத்தில் இருந்தவாறே அனையைப்பார்த்தோம். ஹூவர் அணை அமெரிக்காவில் உள்ள மிக பெரிய அணையாகும். ஹூவர் அணை கொலராடோ ஆற்றின் மேலே 726 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. நெவாடா, கலிபோர்னியா , அரிசோனா மாநிலங்களின் வெள்ள நீர் மேலாண்மை, மற்றும் நீர்மின் சக்திக்காகவும் இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணையின் நீர் தேக்கம் லேக் மீட்(Lake Mead) என்று அழைக்கப்படுகிறது.





பேருந்து பயணத்தில் தொடர்ந்து அரிசோனா பாலை நில காட்சிகளைப்பார்த்துக் கொண்டே கிராண்ட் கேனியன் தேசிய பூங்காவை அடைந்தோம். வளி நெடுகிலும் பனி பெய்து தரையில் பனிக்கட்டிகள் உறைந்து கிடந்தன. குளிரில் நடுங்கி கொண்டே பேருந்தில் இருந்து இறங்கி கிராண்ட் கேனியன் பள்ளதாக்குகளை விளிம்பில்( south rim) நின்று பார்த்தோம். இது அமெரிக்காவின் 15 வது பழமையான தேசிய பூங்காவாக உள்ளது.  கொலராடோ ஆறு இந்த பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் ஓடுகிறது.  கிராண்ட் கேனியன்  உலக ஏழு  அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது  இது 277 மைல்கள் நீண்டும்,18 மைல்கள் பரந்தும், 6,000 அடிகள் ஆழம் உள்ளதாகவும் இருக்கிறது. பூமியின் இரண்டு பில்லியன் புவி இயல் வரலாற்றை இந்த மண் மற்றும் பாறை அடுக்குகளில் காணலாம். புதை குழியுனுள் மண்/பாறை அடுக்குகள், பள்ளதாக்குகள், மலைகள் பார்ப்பதற்கு பிரமிப்பை உண்டாக்கும். 











மாலையில் குளிர் அதிகமாக இருந்ததால், பிரைட் ஏஞ்சல் விடுதியில் சென்று  ஹாட் கோகோ அருந்தி  பின்பு அங்குள்ள பரிசு கடைகள் , அருங்காட்சியகம் , மற்றும் சிற்றுண்டி கடைகளில் உலாவினோம்.  மாலை நான்கு மணி அளவில் பேருந்து மூலம் லாஸ் வேகாஸ் திரும்பினோம்.

No comments: