மனித குலத்தின் கடந்த 13,000 ஆண்டு வரலாற்றை ஆய்வு செய்து இந்தப் புத்தகத்தை ஜாரெட் டைமண்ட் எழுதி உள்ளார். இவர் கலிபோர்னிய பல்கலை கழகத்தில் உடலியல் பேராசிரியராகப் பணி புரிகிறார். மனித சமுதாயங்களிடையே சமச்சீராகத் தொழில் நுட்பங்களோ, உணவு உற்பத்தி முறைகளோ ஏற்படவில்லை. அதற்குக் காரணிகள் பல உண்டு. முக்கியக் காரணிகள் சுற்றுச்சூழல் வேறுபாடுகளேயாகும். இது மரபணு வேறுபாட்டால் இல்லை என்று ஜாரெட் டைமண்ட் வாதிடுகிறார். 1592 ஆம் ஆண்டு நாடுகளைப்பிடிக்கவும், தங்கத்தைக் கொள்ளையிடவும் தென் அமெரிக்க வந்த பிரான்சிஸ்கோ பிஸ்ஸாரோ(Francisco Pizarro) தன்னுடன் கொண்டு வந்த துப்பாக்கி ஏந்திய குதிரைப்படை வீரர்களின் எண்ணிக்கை நூற்று அறுபத்து எட்டுதான். இவர்களால் அறுபது ஆயிரம் படை வீரர்கள் கொண்ட இன்கா பேரரசின் மன்னரான அடஹோல்பா(Atahuallpa) வை சிறைப் பிடித்துக் கொன்றும் ஏராளமான தங்கத்தைக் கொள்ளையிடவும் முடிந்தது. ஏன் ஐரோப்பியர்கள் மற்றக் கண்டங்களில் வாழ்ந்த மக்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடிந்தது? . ஐரோப்பியர்கள் மற்ற இனங்களைவிடப் புத்திசாலிகளாக இருந்தார்களா என்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்க முனைகிறது இந்தப் புத்தகம்.
ஆயுத தொழில் நுட்பமும், ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குக் கொண்டு செல்லும் வழி முறைகளாலும்(கப்பல், குதிரை) சில சமூக மக்கள் தங்களின் ஆதிக்கத்தை விரிவாக்கி மற்ற மக்களை வெல்ல முடிந்தது. அதற்கு அவர்கள் வாழ்ந்த புவியியல் துணை புரிந்தது. வேட்டையாடி காடுகளில் உணவு தேடி திரிந்த மக்கள் ஓரிடத்தில் தங்கி பயிர்களை வேளாண்மை செய்யவும்,காட்டு விலங்குகளைப் பண்ணை விலங்குகளாக வளர்க்க முயன்றமை உலகில் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் சமச்சீராகத் தோன்றவில்லை. ஆனால் இவைகள் யுரேசியா கண்டத்தில் பல இடங்களில் வளர்ச்சி பெற்றன. புவியியல் அவர்களுக்குத் துணை புரிந்தது. வேளாண்மையும்,பண்ணை விலங்குகள் பயன்பாட்டாலும் மக்கள் ஓரிடத்தில் பல காலம் கூட்டமாக வாழ முடிந்தது. கால்நடை வளர்ப்பால் நோய் கிருமிகளும் பெருகியது. நாளடைவில் மக்களின் நோய் எதிர்ப்பு திறனும் வளர்ந்தது. உணவு உற்பத்திற்கு எல்லா மக்களின் தேவையும் இல்லாததால், மற்றவர்கள் எழுதும் மொழியிலும்,தொழில் நுட்பத்திலும் கவனம் செலுத்த முடிந்தது. எஃகு மற்றும் துப்பாக்கிகள் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் வளர வழிவகுத்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்த இந்த வளர்ச்சி மற்றக் கண்டங்களில் (வட/தென் அமெரிக்கா,ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா)ஏற்படவில்லை. இதற்கு முக்கியக் காரணி புவியியல்தான், அங்கு வாழ்ந்த இனங்களின் மரபணுவில் இல்லை என்பதை மனித வரலாற்றின் அடிப்படையில் ஆசிரியர் முன் வைக்கிறார்.
இந்தப் புத்தகம் தற்போது ப்ரவாஹன் என்பவரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பேராசிரியர் ஜாரெட் டைமண்ட் அவர்களின் சிக்கலான கருத்தியலை மொழி பெயர்ப்பாளர் எவ்வாறு தமிழில் எழுதி உள்ளார் என்பதை அறிய ஆவலாக உள்ளது. அடுத்த முறை ஊருக்குச் செல்லும் போது இந்தப் புத்தகத்தை வாங்க வேண்டும்.
No comments:
Post a Comment