Monday, January 20, 2014

எகிப்து பயணக்குறிப்புகள்- கீசா பிரமிடுகள்(Giza Pyramids),நைல் நதிப்பயணம்(Nile Cruise), லக்சோர்/கர்நாக் கோயில்கள்(Luxor and Karnak Temples)




நாங்கள் எகிப்திற்கு 2010 ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டோம்.   அதாவது எகிப்தில்"அரபு வசந்தம்" என்ற அரசியல் புரட்சி நடப்பதற்கு சரியாக ஒரு ஆண்டுக்கு முன்னால்.   அந்தப்  பயண அனுபவம் நினைவில் இருந்து மறைவதிற்கு முன்பே ஆவணப்படுத்துதல் வேண்டும் என்று ரேணுகாவின் வேண்டுதலினாலேயே நான்கு ஆண்டுகளுக்குப்  பின்பு இதை வலைத்தளத்தில் பதிக்கிறேன்.

நண்பர்களுடன் எகிப்து(Egypt) சுற்றுலா பயணத்திற்கு கீதா ட்ராவல்ஸ் மூலம்  ஏற்பாடு செய்திருந்தோம்.

 பெப்ரவரி மாதம் 26 ஆம் தேதி இரவு நியூயார்க் JFK விமான நிலையத்தில் இருந்து பயணம் துவங்கியது.   மறு நாள் கெய்ரோ நகரை சென்றடைந்தோம்.   பயண வழிகாட்டிகள் ஏற்பாடு செய்திருந்த பேருந்துகளில் ஏறி கெய்ரோ நகரின் மையப்பகுதியில், நைல் நதிக்கரையின் மேல் உள்ள செராட்டன் ஹோட்டலை அடைய ஒரு மணிக்கும் மேலானது.

கெய்ரோ போக்குவரத்து நெரிசலுக்குப் பெயர்போனது. அன்று மாலை உள்ளூர் இந்திய உணவகத்தில் வரவேற்பு பானம் மற்றும் இரவு உணவு.    நிறைய பேருக்கு அந்த உணவால் வயிற்று கோளாறு ஏற்பட்டு அடுத்த இரண்டு நாட்கள் பயணத்தின் போது அவதிப்பட வைத்தது.    மறு நாள் கீசா பிரமிடுகள்(Giza Pyramids) பார்க்க கிளம்பினோம்.    வியக்க வைக்கும் மூன்று பிரமிடுகள் அருகருகே உள்ளன.

 மிக அருகில் சென்று பார்க்கும் போது அதன் நேர்த்தியைக்கண்டு எப்படி மனிதர்கள்  இதை கட்டினார்கள் என்ற கேள்வியே மிஞ்சி நிற்கிறது. இவைகள் நினைவுச்சின்ன கல்லறைகள்.   இவைகள்   எகிப்தின் பழைய அரசுக் காலத்தில், 4,500 ஆண்டுகளுக்கு முன்பு  எகிப்தின் மன்னர்களான பாரோக்களால்(Pharaoh) கட்டப்பட்டது .     உயிர் பிரிந்தபின் கடவுளர்களாக நாம்  அடுத்த உலகில் வருவோம் என்று எதிர்பார்த்து கட்டப்பட்டதாக வரலாற்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.




எங்களின் சுற்றுலா வழிகாட்டிகளாக வந்த சயீத் மற்றும் முஹமதுவும் பண்டைய எகுப்தின் வரலாற்றில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள்.     பாரோ கூபுவின் (Pharaoh Khufu)ஆட்சி காலமாகிய  கி.மு.2550ல் முதல் கீசா பிரமிடு திட்டம் தொடங்கியது. கூபு (also called as Cheops) பிரமிடுவைக் கட்டி முடிக்க 20 ஆண்டுகள் எடுத்திருக்கும் என நம்பப்படுகிறது.     பெரிய பிரமிடான கூபுவின் உயரம் 481 அடி. இதில் 2.3 மில்லியன் கல் தொகுதிகள் உண்டு. ஒவ்வொரு கல்லும் 2.5 முதல் 15 டன் சராசரியாக எடையைக் கொண்டுள்ளது.

   பெரிய பிரமிடின் கட்டுமான நுட்பங்கள் பற்றிய தெளிவானக் கோட்பாடுகள் இல்லை.   பெரிய பிரமிட் உள்ளே தெரிந்த மூன்று அறைகள் உள்ளன .    கிசாவின் பெரிய பிரமிடில் மட்டிலுமே ஏறும் மற்றும் இறங்கும் படிகளைக் காணமுடியும்.
இரண்டாவது பிரமிடைக் கூபுவின் (Khufu) மகன் , காப்ர (Khafre ,also called as Chefren) கி.மு. 2520ல்   கட்டினார்.     இதன் அருகே  மனித தலையுடனும், சிங்கத்தின் உடல் பொருந்திய பெரிய ஸ்பிங்ஸ் சிலை (Sphinx) உள்ளது.    ஸ்பிங்சின் முகம் பாரோ காப்ர( Khafra) முகத்தை குறிப்பதாக நம்பப்படுகிறது.     இது 63 அடி அகலமும், 241 அடி நீளமும்,66 அடி உயரமும் கொண்ட  உலகின் மிகப் பெரிய ஒற்றைக்கல் சிலையாகும்.    


கீசா பிரமிடுகளில் மூன்றாவது( also called as Mykerinus) முதல் இரண்டை விட சிறியதாக இருக்கிறது .    பாரோ மென்கார் (Menkaure also Mykerinus) காலத்தில் சுமார் கி.மு 249௦ல் கட்டப்பட்டது.    ஒட்டகச் சவாரி மூலம் இவ்விடத்தை நன்கு கண்டுகளிக்கலாம்.     கீசா பிரமிடுகள்(Giza Pyramids)உலகின் மிக பிரபலமான சுற்றுலாத்  தலங்களில் ஒன்று.       சூரிய அஸ்தமனத்திற்குப்  பிறகு  பிரமிடுகளின் ஒளி காட்டு நிகழ்ச்சியைப் பார்த்து ரசிக்கலாம்.      பிரமிடுகள்தான் பண்டைய எகிப்தை உருவாக்க உதவியது என்பார்கள்.      பண்டைய உலக ஏழு அதிசயங்களில் பழமையான இந்த கீசா பிரமிடுகள், சுற்றலா மூலம் நவீன எகிப்தின் பொருளாதரத்தையும்  காக்கிறது .


 ஒரு உள்ளூர் உணவகத்தில் மதிய உணவிற்குப்  பின் மெம்பிஸ்(Memphis) மற்றும் சக்கார(Sakkara)  என்ற  இடங்களைப் பார்க்கப் புறப்பட்டோம்.    மெம்பிஸ் எகிப்தின் முதல் தலைநகரமாக இருந்தது.      பழைய அரசின்(old kingdom) காலத்தில் கி.மு. 3,100ல் Menes மன்னரால் நிறுவப்பட்டது.    சக்காரா மெம்பிஸின் இடுகாடாகும்.     சக்காராவில் உள்ள படிவடிவப் பிரமிடுதான் மிகப் பழமையானது.     ஜோசெர்(Djoser) மன்னரால் இது கட்டப்பட்டது. பிரமிடுவின் கட்டிடக்கலைக்கு இதுதான் ஆரம்பமாக இருந்துள்ளது.  


எகிப்தில் நூற்றுக்கும் மேலான பிரமிடுகள் உள்ளன.   மெம்பிஸ் 3000 ஆண்டுகளுக்கு மேலாக எகிப்தின்   கலாச்சாரத்தின் மையமாகக் கருதப்படுகிறது,      பத்தொன்பதாம் வம்சத்தின்(New Kingdom)  மூன்றாவது எகிப்திய பாரோ ராம்சிசின் (Ramses II) சிலையைப் பார்த்தோம்.     இவரின் ஆட்சிக்காலம் கி.மு1213 முதல் 1279 வரை இருந்தது.     இவர் எகிப்திய பேரரசின், மிகப் பெரிய மிகவும் பிரபலமான, சக்தி வாய்ந்த பாரோவாகக் கருதப்படுகிறார்.

 மறு நாள் காலை உணவிற்குப் பிறகு, பழைய கெய்ரோவில் தொங்கும் தேவாலயம்(hanging church) ,செயின்ட் செர்ஜி சர்ச்(The church of St. Sergio) ,பென் எஸ்றா சினகாக்(The Synagogue of Ben Ezra) பார்க்கச் சென்றோம்.     பாபிலோன் கோட்டையின் இரண்டு சுவர்களுக்கு இடையே கட்டப்பட்டதால்  இது தொங்கும் தேவாலயம் என்றழைக்கப்படுகிறது.     காப்டிக்(Coptic) கிருத்துவ மதத்திற்கு இது பெரும் பங்கு ஆற்றியுள்ளது. எகிப்தில் உள்ள காப்டிக்கிருத்துவ மதம் மிகவும் பழைமையானது.      எகிப்தின் மக்கள்தொகையில் பத்து விழுக்காடு காப்டிக் கிருத்துவர்களாகும்.       செயின்ட் செர்ஜியோ தேவாலயம் பண்டைய ரோமன் கோட்டை மையத்தில் கட்டப்பட்டுள்ளது.   புனித குடும்பம்(Jesus family) வருகை தந்த தளங்களில் இந்த தேவாலயமும் ஒன்று எனக் கருதப்படுகிறது.     பென் எஸ்றா சினகாகில் கடந்த கால யூதர்களின் வாழ்க்கைப் பற்றிய தகவல்கள் கொண்டுள்ள நூலகம் உள்ளது.
  மதியம் இஸ்லாமிய கெய்ரோப் பகுதிக்குச் சென்றோம். சிட்டாடல் என்ற கோட்டை மலைக்கு மேலே அமைந்துள்ளது .     இந்த கோட்டை சலா எல் டின்(Salah El-Din ) என்ற மன்னரால் கி.பி.1176 ல், கிருத்துவ ராணுவத்தை(Crusaders) தடுக்க கட்டப்பட்டதாகும்.  






 பின்னால் முகமது அலி பாஷா ஆட்சியின் போது  இக்கோட்டை விரிவாக்கப்பட்டது.     இங்குள்ள பெரிய  முகமது அலி மசூதியின் உட்புறம் உள்ள வேலைப்பாடுகள் மிகவும் கலையம்சம் கொண்டதாக இருந்ததால் நிறைய நேரங்கள் இங்கு செலவிட்டோம்.

  பெரிய ஒட்டோமான் ஆட்சியாளர் சமாதித்  தளமும் இங்குள்ளது.    மலை உச்சியில் இருந்து தொலைவில் கிசா பிரமிடுகளின் அற்புதமான காட்சியைக் காணலாம்.

அடுத்த நாள் எகிப்தின் இரண்டாவது பெரிய நகரமான அலெக்சாண்டிரியாவிற்கு (Alexandria )பயணமானோம்.    பேருந்தில் நான்கு மணி நேரப்பயணம்.   நெடுகிலும் சிறு ஊர்களையும், பண்ணைகளையும் பார்க்கலாம்.     கூம்பு போன்ற வீடுகளில் புறா வளர்க்கிறார்கள்.    எகிப்தியர் புறாக்கறியை விரும்பி உண்கிறார்கள். நைல் நதியால் இந்த பகுதி வளமாக உள்ளது.   அலெக்சாண்டிரியா மத்தியதரை கடற்கரை நகரமாகும்.    இது மிகப் துறைமுகமுமாகும்.  4.5 மில்லியன் மக்கள் தொகை கொண்டது.  இந்நகரம் மகா அலெக்சாந்தரால் கி.மு 331 ல் நிறுவப்பட்டது என்று வரலாறு கூறுகிறது.
முதலில் பொம்பே பில்லர்( Pillar of Pompey) என்ற இடத்தில உள்ள ரோமானியர்களின் கட்டிடச் சிதவுகளைப்பார்த்தோம்.     சிவப்பு கல்லிலானா 60 அடிக்கும் மேல் உயரமுடைய தூபியையும்,sphinnx சிலையும் இவ்விடத்தின் சிறப்பு அம்சமாகும். 



கட
கட ற்கரையில் உள்ள கித்பே கோட்டையும்(Citadel of Qaitbay) அங்கிருந்து சிறு தொலைவில் உள்ள எல்-முர்சி அபுல்-அப்பாஸ்(El-Mursi Abul-Abbas Mosque) மசூதியும் பார்க்க வேண்டிய இடங்களாகும்.     பேருந்தில் பயணிக்கும்போது பெயர் பெற்ற அலெக்சாண்டிரியாவின் நூலகத்தை பார்த்தோம்.     மாலை கெய்ரோ திரும்பும் வழியில் கசர் எல் மாண்டாச(Qasr El Montazah) என்ற அரண்மனையையும், கடற்கரையோரம் அமைந்த பூங்காவையும் பார்க்கும்போது இருட்டு கட்டிவிட்டது.     அன்றிரவே கெய்ரோ வந்து சேர்ந்தோம்.


மறு நாள் அஸ்வான் அணையைப் பார்க்கவும்,நைல் நதி மேல் இரண்டு நாட்கள் இனிய கப்பல் பயணத்திற்காகவும் கெய்ரோ விமான நிலையத்தில் இருந்து அஸ்வான் புறப்பட்டோம்.    சில நண்பர்கள் அபு சிம்பெலில்(Abu Simbel) உள்ள இருப்பாறைக் கோவில்களைப்  பார்க்க சென்றார்கள்.    அபு சிம்பெலில் இரட்டைக்  கோயில்கள்  அஸ்வான் அணையின் தென்மேற்கு பகுதியில்(Nubia) உள்ளது.     இந்த இரட்டைக்  கோயில்கள் (Great Temple of Ra-Harakhte and Temple of Hathor) வரலாற்று சிறப்பு வாய்ந்த பாரோ ராம்சிஸ் II(Ramses II)காலத்தில் கட்டப்பட்டது.    முதல் கோயிலில் பிரமாண்டமான நான்கு  ராம்சிசின் உருவச்சிலைகள் உள்ளன.    இரண்டாவது கோயில் ராம்சிசின் மனைவி ராணி நெஃபெர்தரியின்(Queen Nefertari) ஒரு நினைவுச்சின்னம் என கருதப்படுகிறது.  1968 ம் ஆண்டு அஸ்வான் அனைக்கட்டும்போது,   இந்த இரு கோயில்களும் நீரில் மூழ்குவதைத்  தவிர்க்க, கோயிலில் ஒவ்வொரு கல்லும் இடமாற்றம்  செய்யப்பட்டு, ஒரு செயற்கை மலை மீது, நாசர் ஏரியின்(Lake Nasser) மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டது.    இந்தக் கோயில்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வானில் இறங்கிய பின்,நைல் நதி மேல் பயணம் மேற்கொள்ள இருந்த கப்பலில்(Moon  Dance )பெட்டிகளை வைத்து விட்டு, அஸ்வான் அணையைப்  பார்க்க கிளம்பினோம்.    1952 ம் ஆண்டு ஜூலைப் புரட்சிக்கு பின்னர் , பதவிக்கு வந்த ஜனாதிபதி நாசரால்தான் நைல் நதியில் அணைக்கட்டும்  திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.     ஆனால் இணைந்து செயல்பட மேற்கத்திய நாடுகள் மறுத்ததால் , சோவியத்தின் உதவியோடு 1960ல் தொடங்கி  1971 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.     இந்த பெரிய  மண் அணையின் நீளம் 3.8 கிலோமீட்டர் , உயரம் 364 அடிகள்,அடித்தளத்தின் அகலம் 3,220அடிகள்.      அணையால் உண்டான நீர் தேக்கத்திற்கு நாசர் ஏரி(Lake Nasser) என்று அழைக்கப்படுகிறது.

 இந்த நாசர் ஏரியில் நீரின் கொள்ளளவு சுமாராக 132 கியுபிக் மைல்களாகும். உலகிலேயே மனிதன் உருவாக்கிய பெரிய ஏரி இதுவாகும்.    நைல் நதி மத்திய ஆப்ரிக்கா கண்டத்தில் நீரோடையாக துவங்கி, வடக்கு நோக்கி பல நாடுகளை கடந்து,நீல,வெள்ளை நதிகளாகி,எத்தியோப்பாவில் நைல் நதியாகி, பாலைவனமான சுடான்,எகிப்தை வளமாக்கி மத்தியத்தரைக் கடலில் கலக்கிறது.

அடுத்து நாசர் ஏரியின் தீவுப்பகுதியில்,பிலேவில்(Philae) அமைந்துள்ள ஐசிஸ் கோயிலைப்(Temple of Isis) பார்க்க படகில் ஏறிச் சென்றோம்.   ஐசிஸ் கோவில் எகிப்தில்உள்ள மிக பெரிய கோயில்களில் ஒன்றாகும்.





இந்தக் கோயில் தாலமி(Ptolemy II) காலத்தில் தொடங்கி ரோமானிய பேரரசர்களின் நிறைவு செய்யப்பட்டது.    இறுதிசடங்குகளில் தொடர்புடைய ஐசிஸ் என்ற பெண் கடவுள், ஒசைரிசிக்கு(Osiris) புத்துயிர் கொடுத்து கடவுள் ஹோரசை(Horus)   பெற்றெடுத்தார் என்பது ஐதீகம்.   பண்டைய  கிரேக்கர்களும், ரோமானியர்களும் ஐசிசை ஒரு தாய்க்கடவுள் என்றே கருதினர்.    இரண்டு கோபுரங்கள், நுழைவாயில்,ஒரு திறந்த முற்றம், சுவரில் ஹோரஸ் பிறந்த காட்சிகளை சித்தரிக்கும் நிகழ்வுகள் பொறிக்கப்பட்டிருந்தன.    பல நூற்றாண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட இந்தக் கோயில்
 பேரரசர் ஜஸ்டினியன் ( 527-565 AD) ஆட்சி காலத்தில்  ஒரு தேவாலயமாக மாற்றப்பட்டது.      உயர் அஸ்வான் அணை 1960 ல் கட்டப்பட்டபோது கோயில் கிட்டத்தட்ட நீரில் மூழ்கும் நிலையில் இருந்தது.    அதிர்ஷ்டவசமாக  எகிப்திய அரசாங்கம் மற்றும் யுனெஸ்கோவின் கூட்டு நடவடிக்கை மூலம் இந்தக் கோயில் மீட்கப்பட்டது.

மூன் டான்ஸ்(Moon Dance ) என்ற மகிழ் கப்பலில் ஏறி, நைல் நதி மேல் அஸ்வானில் இருந்து பயணத்தை ஆரம்பித்தோம்.   கப்பலில் ஐம்பதிற்கும் மேற்பட்ட அறைகள் இருந்தன.  ஒரு அறையில் இருவர் மிக வசதியாக தங்கலாம்.


முழு இரவும் பயணம் செய்து, மறு நாள் காலையில் நதிக்கரையில் அமைந்துள்ள கோம் அம்போ(Kom Ombo) என்ற இடத்தை அடைந்தோம். நதிக்கரையில் இருந்தக் கோயிலைச் சுற்றிப்பார்த்தோம்.    இந்தக்கோயில் முதலையைக் கடவுளாக(crocodile god Sobek) கொண்ட கோயிலாகும்.   இது ஆற்றின் ஒரு வளைவில் அமைந்துள்ளது.

  பண்டைய காலத்தில் முதலைகள்  இந்த ஆற்றங்கரையில் சூரிய ஒளியில் திளைத்திருக்க்கும் என்று   நம்பப்படுகிறது.    கோயிலில் உள்ள ஒரு கிரேக்க காலத்திய கல்வெட்டு மூலம் இது ஆறாம் தாலமி(Ptolemy VI) பிலோமேட்டர் (Philometor) மற்றும் அவரது சகோதரி மனைவி கிளியோபாட்ரா காலத்தில் (கி.மு 180-145) புனரமைக்கப்பட்டதாக தெரிகிறது.    கோயிலில் கிளியோபாட்ரா உருவமும், ரோமானிய எகிப்தில் பயன்படுத்தப்பட்ட மருத்துவ கருவிகளும் சுவற்றில் பொறிக்கப்பட்டுள்ளது.



  தொடர்ந்து ஆற்றில் பயணம் செய்தோம்.    நைல் நதி சில இடங்களில் குறுகியும்,சில இடங்களில் பரந்தும் காணப்படுகிறது.   இரு கரைகளிலும் கரும்பு தோட்டங்களையும்,பயிர்களையும் காணலாம்.  கப்பலின்  மேல் தளத்தில் இருந்து பார்த்தால் ஆற்றின்  கரைப்பகுதியின் பசுமையைத் தாண்டிப் பாலைவனம் இரு புறமும் விரிந்து காட்சியளிக்கிறது.




 மாலையில் எட்பு(Edfu)என்ற நகரை அடைந்தோம்.     இதன் மேற்கு கரையில் உள்ளக் கோயில் தாலமிக் காலத்தில்(Ptolemaic period)கட்டப்பட்டதாகும்.  கிரேக்க-ரோமானியா கோயில் அமைப்பை கொண்டுள்ளது.

  எட்பு கோயிலின் தலைமைக்  கடவுள் ஹோரஸ்-அபோல்லோ( Horus - Apollo).    பல நூற்றாண்டுகளாகக்  கோவில், பாலைவன மணல் மற்றும் நைல் வண்டல் மண் அடுக்குகளால்  மூடி,கோபுர வடிவின் மேல் பகுதி மட்டும் தெரியும்படி இருந்தது.     1860 ஆம் ஆண்டு ஆகுச்டே மாரியட்(Auguste Mariette)என்ற ஒரு பிரஞ்சு தொல்லியல் வல்லுநர் இந்த கோயிலை மண் குவியலில் இருந்து மீட்டு எடுத்தார்.     எட்பு கோயில் பண்டைய எகிப்திய கோயிலுக்கு ஒரு நல்ல உதாரணம் என்று வழிகாட்டி சயீத் கூறினார்.    திரும்பவும் கப்பலுக்கு வந்து, இரவு உணவிற்குப் பின்னர் களைப்பு நீங்கத் தூங்கினோம்.   இரவிலும் படகின் பயணம் தொடர்ந்தது.      மறு நாள் காலை லக்சோர்(Luxor) நகரை அடைந்தோம். நைல் நதி மீதானக் கப்பல் பயணம் முடிவுக்கு வந்தது.     நைல் நதிப் பயணம் ஒரு மறக்க முடியாத அனுபவமாகும்.


 இன்னொரு படகில் ஏறி லக்சோரின் மேற்கு கரைக்கு சென்று,பேருந்து மூலம் தீபிஸ் (Tebes) மலைத் தொடரில் உள்ள பாரோக்களின் கல்லறைப் பள்ளத்தாக்குப் பகுதிக்கு(Valley of the Kings) சென்றோம்.

 இந்த கல்லறைகள் கி.மு.1600ல் தொடங்கி கி.மு.1100 வரை சுமார் ஐநூறு ஆண்டுகளாக, பாரோ மன்னர்களுக்காக கட்டப்பட்டவைகளாகும்.    பல அறைகள் கொண்ட கல்லறையின் உள்ளே இறுதிச் சடங்குகளையும், இறந்த மன்னரின் அடுத்துலகப்பயண த்திற்கு உதவும் என்று நம்பி கல்லறையில் வைத்திருந்த பொருட்கள்  எல்லாம் சுவற்றிலே சித்திரமாகத் தீட்டப்பட்டு
 இருந்தது.  ஆனால்  எல்லாப் பொருட்களும்  பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இக்கல்லறைகளில் இருந்து திருடப்பட்டுவிட்டன.  

 படிகளில் இறங்கி சுரங்கத்தின் முன் வாயிலைக் கடந்து  கல்லறைகளைப் பார்த்தோம்.   யாராலும் உட்புகுந்து திருடப்படாத ஒரு கல்லறையை 1922-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஹாவட் கார்டர் (Howard Carter ) என்ற தொல்பொருள் ஆய்வாளரால் கண்டுபிடிக்கப்பட்டது.    இது துட்டன் கா அமூன் ((Tutankhamun, கிமு 1341 – கிமு 1323)என்ற பண்டைய எகிப்தின் பதினெட்டாவது வம்ச பாரோவின் கல்லறையாகும்.   அக்கால எகிப்தியப் பெரிய கடவுளின் பெயர் ஆமூன் என்பதாகும்.   அதுவே இந்த இளவயது பாரோவின் பெயரிலும் சேர்ந்திருக்கிறது .   தனது  ஒன்பதாவது வயதிலேயே ஆட்சி பீடத்தை பிடித்த இவர் தனது 19-வது வயதில் காலமானார்.  இவர் கல்லறையில் இருந்த நூற்றுக்கணக்கான தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்கள் கெய்ரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

அடுத்து  நாங்கள் பார்க்கச்  சென்ற இடம் தீர் எல்-பாகிரி(Deir el-Bahri Temple Complex) வளாகமாகும். இந்தக்கோயில் ராணி ஹத்ஷேப்சுட்(Queen Hatshepsut) கட்டியதாகும்.   இவர்தான் எகுப்திய வரலாற்றில் முதல் பெண் மன்னராகும். இந்தகோயில், நைல் நதியின் மேற்கு பகுதியில் உள்ள  ஒரு அரைவட்ட மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.   எகிப்தில் மிகவும் அழகான கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.





 நாங்கள் பார்த்த அடுத்தக்  கோயில் புகழ் பெற்ற கர்னாக் கோயிலாகும்.    இதன் வளாகம் மிகப்பெரியது. 


 இது சிதைந்த கோயில்களையும் , தேவாலயங்களையும் , கோபுர வடிவங்களையும் , பல உருவச்சிலைகளையும்  மற்றும்  பல்வேறு கட்டிடங்களையும் கொண்டது. ஒரு ஆயிரம் ஆண்டுகளாக் கட்டப்பட்ட கோயில் வளாகமாகும்.  சுமார் முப்பது பாரோக்ககளின் பங்களிப்பு இங்குள்ளது என்று வழிகாட்டி கூறினார். மூன்று கடவுளுகளுக்கு, அமுன்-ரே,மட்,மான்ட்( Amun-Re,Mut,Montu)என்ற தீப்சின் திருமூர்த்திகளுக்கு தனித்தனியான வளாகங்கள் உள்ளது.   அமுன்-ரே கோயிலில் ஹைபோஸ்டைல் மண்டபத்தின் பரப்பளவு 50,000 சதுர அடிகளாகும்.    இந்த மண்டபத்தில் 16 வரிசைகளில்  134 பாரிய தூண்கள் உள்ளன.    இந்த தூண்கள்  முப்பது மற்றும் அறுபது அடிகள் உயரமும், பத்து அடி விட்டமும் உடையவைகளாகும்.    பார்ப்பதற்கு பிரமாண்டமாக இருந்தது.

  இங்குள்ள சதுரத் தூபி(obelisk) ராணி ஹத்ஷேப்சுட்(Queen Hatshepsut) கட்டியதாகும்.    இது பண்டைய உலகின் மிக உயரமான(97 அடிகள்) ஒற்றைக் கல்லிலான சதுரத் தூபி.  



கர்னாக் கோயிலைப் பார்த்துவிட்டு திரும்பும் போது இருட்டு கட்டத் தொடங்கிவிட்டது.     இன்னும் லக்சோர்  கோயிலைப் பார்க்கவேண்டுமே என்று நைல் நதியின் கிழக்கு கரைப் பகுதிக்கு விரைந்தோம்.   லக்சோர்  கோயில் 1400 கி.மு. ஆம் ஆண்டு  தொடங்கி  பல நூறு ஆண்டுகளாகக் கட்டப்பட்ட கோயிலாகும்.   துட்டன் கா அமூன் ,ஹத்ஷேப்சுட், இரண்டாம் ராம்சிஸ்,அமேன்ஹோடேப் போன்ற பாரோக்களின் பங்கும் இதில் உண்டு. கோவில் பின்புறம்  தூத்மொசிஸ் (Tuthmosis III) மற்றும் அலெக்சாண்டர் காலத்தில் கட்டப்பட்ட தொழுகை இடங்கள் உள்ளன.   ரோமன் அரசு காலத்தில், கோவில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களும் அரசின் கோட்டையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.   கோயிலின் நுழை வாயிலில்  இரண்டாம் ராம்சிசின் ( Ramesses II ) பெரிய சிலை அலங்கரிக்கிறது.   அங்கிருந்த இரண்டு சதுர தூண்களில் ஓன்று தற்போது பாரிஸ் நகரில் இருப்பதாக வழிகாட்டி கூறினார்.





இரவில் ஒளி இடப்பட்டு கோயிலில் உள்ள சிலைகள் நம்மை வேறு உலகத்திற்கு கொண்டு செல்வது போன்ற உணர்வு ஏற்பட்டது.
 பாரோ மன்னர்களால் உருவாக்கப்பட்ட எகிப்திய நாகரிகம் மற்ற நாகரிகங்களைவிட பழமையானது.    கீழ் எகிப்தையும், மேல் எகிப்தையும் இணைத்து பாரோ மன்னர்களால் கிமு 3150 அளவில் தொடங்கிய எகிப்திய நாகரிகம்   மூவாயரம் ஆண்டுகள் வளர்ச்சியடைந்தது.     இடையிடையே நிலையற்ற இடைக் காலங்களையும் கொண்டு அமைந்திருந்தது.  இந் நாகரிகம் பல வெளிச் சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டது.    கிமு 31 ஆம் ஆண்டில்,  ரோமப் பேரரசு எகிப்தைக் கைப்பற்றி அதனைப் பேரரசின் ஒரு பகுதியாக மாற்றியபோது பாரோக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

மறு நாள் லக்சாரின் விமான நிலையத்தில் இருந்து கெய்ரோவிற்கு பயணமானோம்.    மதியம் கெய்ரோவில் தஹ்ரிர் சதுக்கத்தின் அருகே உள்ள எகிப்திய அருங்காட்சியகத்தைப்((Museum of Egyptian Antiquities)  பார்க்க கிளம்பினோம்.    எங்களுடன் எகிப்தியியல்(Egyptologist) வழிகாட்டியும் வந்திருந்தார்.     அருங்காட்சியகத்தில் , தரைத் தளம் மற்றும் முதல் மாடியில்  பண்டைய உலகில் பயன்படுத்திய பாப்பிரஸ் மற்றும் நாணயங்களின் ஒரு விரிவான தொகுப்புகள் உள்ளது.    பாப்பிரஸ் பல துண்டுகளில், கிரேக்கம், லத்தீன், அரபு ,மொழிகளில் காணப்படுகின்றன.






 தங்கம், வெள்ளி, வெண்கலம் உட்பட பல்வேறு உலோகங்கள், செய்யப்பட்ட. நாணயங்களைப் பார்க்கலாம்.    கி.மு. 1550 மற்றும் கி.மு 1069 காலத்தில் இருந்த கலைப்பொருட்கள், ஹெய்ரோகிலிபிக் (hieroglyphic) ஆல் எழுதப்பட்ட கல்வெட்டுகளையும் இங்கு காணலாம். பண்டைய எகிப்தின் எழுதும் முறை ஹெய்ரோகிலிபிக் (hieroglyphic) என அழைக்கப்பட்டது.    இது ஒரு சித்திர குறியெழுத்தைக் கொண்ட எழுத்துருவங்கள். இவ்வாறான எழுத்துக்கள் கோவில்களிலும் பிரமிட்டுக்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 பல நூற்றாண்டு காலமாக எகிப்திய சித்திர குறியெழுத்தை(Hieroglyphs) மொழிபெயர்ப்பு செய்ய இயலாமல் இருந்தது.    உண்மையான திருப்புமுனை நெப்போலியன் எகிப்திய படையெடுப்பின் போது ஏற்ப்பட்டது .     1799 ஆம் ஆண்டில் நெப்போலியனின் படைகள் மூன்று மொழிகளால் எழுதப்பட்ட கல்வெட்டினயைக் கண்டார்கள்.    அந்தக்கல்லில் ஒரு உரையை கிரேக்கம்(Greek), டேமொடிக்(demotic ) மற்றும் எகுப்திய சித்திர குறியெழுத்து (hieroglyphic)மூன்றிலும் எழுதப்பட்டு இருந்தன.   இந்தக்கல் ரொசெட்டா கல்(Rosetta Stone) என்றழைக்கப்படுகிறது,    இறுதியாக, ஜீன்-பிரான்கோயிஸ் சம்போலியன்( Jean-Francois Champollion) 1820ல் எகிப்திய சித்திர குறியெழுத்தை முழுமையாக மொழி பெயர்த்தார்.   எகிப்திய வரலாறு இதன் மூலம்தான் தெரியவந்தது.
                                               Rosetta Stone -British Museum



முதல் மாடியில் பாரோ Thutmosis III , Thutmosis IV , Amenophis கல்லறைகளில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளது.   இறந்த பாரோக்களின் பதப்படுத்தப்பட்ட உடல்களும்(mummies), சவப்பெட்டிகளும் இங்கு தனிப்பிரிவில் (Royal Mummies)உள்ளன.    இரண்டாம் ராம்சிஸ், அமேன்ஹோடேப், ஹத்ஷேப்சுட் போன்ற புகழ் பெற்ற பாரோக்களின் பதப்படுத்தப்பட்ட உடல்களும் கண்ணாடி குடுவைக்குள் வைக்கப்பட்டுள்ளன. பல ஆயிரம் ஆண்டுகளுக்குப்  பின்னரும் தலை முடியும்,விரல் நகமும் அப்படியே இருப்பதைப்பார்த்து வியந்தோம்.  துட்டன் காமுனின் தங்க முகமூடி இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

 அவர் கல்லறையில்  இருந்த 3,500  மேற்பட்ட பொருட்கள் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன.   பூச்சாடிகள் மற்றும் பளிங்கு குடுவைகள் , பெட்டி ,ஆயுதங்கள் இரண்டு தந்தம் மற்றும் தங்க வளையல்கள், கழுத்தணிகள் , மற்றும் அலங்கார நகைகள் இதில் அடங்கும்.   கடந்த 7,000 ஆண்டுகளுக்கான எகிப்திய வரலாற்றை தொல்பொருள் அருங்காட்சியகத்தில் உள்ள 120,000 க்கும் மேற்பட்ட பொருட்கள் வெளிப்படுத்துகின்றன .

எகுப்தியப் பயணம் சாஹேல் அல் கலேயில்( Sahel Al Ghelel)  உள்ள தெருக்கடைகளில் நடந்து பொருட்களை வாங்கியபின் முடிவுக்கு வந்தது. இரவு உணவிற்குப்பின்  கெய்ரோ விமான நிலையத்தில் இருந்து  நியூயார்க் நகருக்கு பயணமானோம்.  வாழ்நாளில் ஒரு முறையாவது எகிப்தை சுற்றிப்பார்க்கவேண்டும் என்றக்  கனவு நனவாகியது

No comments: